`அப்பாவிடம் பேசிய அந்த கண்ணீர் அழுகைக் குரலே முக்கிய சாட்சி'- கண்கலங்க வைக்கும் விஸ்மயாவின் மறுபக்கம்!

By என்.சுவாமிநாதன்

தன் கணவர் கொடுத்த மிதமிஞ்சிய வரதட்சணைக் கொடுமையால் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார் கேரளத்தைச் சேர்ந்த விஸ்மயா. அவரது மரணம் ஒட்டுமொத்த கேரளத்தையுமே உடைந்து உருகவைத்தது. இப்போது விஸ்மயாவின் உருகவைக்கும் மறுபக்கம் வெளியாகியுள்ளது.

கேரளத்தில் கொல்லம் மாவட்டம், நிலமேல் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்மயா. இவரது தந்தை திரிவிரிகாமன் நாயர், தன் மகளுக்கு வரன் தேடிக்கொண்டிருந்தபோது ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டுதான் இருந்தார் விஸ்மயா. தொடர்ந்து, அவரே அப்பா படிப்பு முடிந்து, சில ஆண்டுகள் ஆயுர்வேத மருத்துவராக பயிற்சியும் செய்துவிட்டுத் திருமணம் செய்துகொள்கிறேனே என கேட்டார். ஆயுர்வேதக் கல்லூரியில் முதல்வகுப்பு மதிப்பெண்ணை பெற்றுவந்த விஸ்மயாவுக்கு, கிரண்குமாரை திருமணம் செய்துவைக்க தொடர்ந்து பேசி சம்மதிக்கவும் வைத்துவிட்டார் திரிவிரிகாமன்.

அதற்கு ஒருகாரணமும் இருக்கிறது. ‘கால் காசு சம்பளம் என்றாலும் கவர்மென்ட் சம்பளம்’ என்பதால்தான் திரிவிரிகாமன், கிரண்குமாரை மருமகனாக தேர்வுசெய்தார். மோட்டார் வாகன உதவி ஆய்வாளராக பணியில் இருக்கும் கிரண்குமாருக்கு அடுத்தடுத்து பதவி உயர்வு கிடைக்கும். பத்தாண்டுகளில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரியாக உயர்வார் என்றெல்லாம் கணக்குபோட்டு, அப்பா உனக்கு நல்ல வாழ்க்கைதான் அமைத்துத் தருகிறேன் என விஸ்மயாவிடமும் இறுதியாண்டு படிக்கும்போதே திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டார் திரிவிரிகாமன். திருமணத்திற்கு பின்னும் படிக்கலாம் என கிரண்குமார் வீட்டில் சொல்ல மருத்துவராகும் கனவோடு கழுத்தை நீட்டினார் விஸ்மயா.

ஆம்!.. திருமணத்திற்குப் பின்பு, தான் தற்கொலை செய்துகொண்டிருந்த தருணத்திலும்கூட விஸ்மயா இறுதியாண்டு ஆயுர்வேதக் கல்லூரி மாணவிதான்! கடைசிவரை அவரது மருத்துவர் கனவு நிறைவேறவே இல்லை. மருத்துவமனைக்குள் பிரேத பரிசோதனைக்குத்தான் விஸ்மயா நுழையப்போகிறார் என்று அவரே அதுவரை நினைத்துப் பார்க்கவில்லை.

தன் மகளுக்கு அரசு ஊழியரை மணம்முடிக்கிறோம் என்னும் பூரிப்பில் ஒன்றே கால் ஏக்கர் நிலம், சொகுசு கார், நூறு பவுன் நகைகள் என விஸ்மயாவின் குடும்பம் மிதமிஞ்சி வரதட்சணைக் கொடுக்கவே, விஸ்மயா வீட்டில் வாங்கிக்கொடுத்த பத்துலட்ச ரூபாய் மதிப்பிலான கார் தனக்குப் பிடிக்கவில்லை எனவும், புதிய கார் வாங்க வேண்டும் அல்லது அதற்கான தொகையைத் தரவேண்டும் எனவும் கேட்டுத் தொந்தரவு செய்யத் தொடங்கினார் கிரண்குமார். விஸ்மயா தன் தோழிகளிடம் தன் இன்னல்கள் குறித்து இலைமறைக்காயாக பகிர்ந்தவர், ``நல்லா படிங்க... சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு படித்துவிட்டு மட்டுமே திருமணம் செய்யுங்கள்'' என அட்வைஸ் கூறுவதை அவர்களும் விஸ்மயா சாதாரணமாகச் சொல்வதாகவே நினைத்திருக்கிறார்கள்!

கடந்த ஆண்டு, ஜூன் 21-ம் தேதி விஸ்மயா தன் கணவர் வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டார். ஆனால் அதற்கும் சிலதினங்களுக்கு முன்பே தன் தந்தைக்கு அழைத்தவர், ``நான் இனியும் இங்கே வாழ்ந்தால் என்னை நீங்கள் பார்க்கவே மாட்டீர்கள் அச்சா! (அப்பா). நான் திரும்பி நம் வீட்டுக்கே வர விரும்புகிறேன். இங்கே என்னால் இருக்கவே முடியாது. எனக்கு மிதமிஞ்சிய பயமாக இருக்கிறது” என கண்ணீர் விட்டு அழுதார். அந்த குரல் பதிவே விஸ்மயா வழக்கில் முக்கிய சாட்சியாக மாறியது. அதேநேரத்தில் விஸ்மயாவின் தந்தை அவருக்கு ஆறுதல் சொல்வதும் அந்தக்குரல் பதிவில் பதிவாகி உள்ளது. தான் தாக்கப்பட்ட காட்சிகளை சொந்தங்களுக்கு வாட்ஸ் அப் புகைப்படங்களாக அனுப்பிவிட்டு இறந்ததற்கும், கிரண்குமாருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவும் பயன்பட்ட விஸ்மயாவின் கல்வியறிவு, சூழலை எதிர்த்துப் போராடும் மனதிடத்தை வழங்க தவறிவிட்டது. எந்த அரசு வேலையை காரணம்காட்டி கிரண்குமார் வரதட்சணைக் கொடுமை செய்தாரோ, வரதட்சணை வழக்கால் அந்தவேலையை விட்டே நீக்கியது கேரள அரசு.

நல்ல வரன், கைநிறைய சம்பளம், அரசுப்பணி என்பதையெல்லாம் தாண்டி, பெண்களின் குரலுக்கு, ஒரு தொலைபேசி அழைப்புக்கு, ஒரு சிறிய அழுகைக்கு பெற்றோர் எவ்வளவு முக்கியத்துவமும், கவனிப்பும் செலுத்த வேண்டும் என்பதற்கும் முன்னுதாரணமாகியிருக்கிறார் விஸ்மயா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE