நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தந்தை: சொத்துக்காக மகன்கள் வெறிச்செயல்!

By காமதேனு

விழுப்புரம் அருகே சொத்து பிரச்சினை காரணமாக முன்னாள் நகர மன்றத் தலைவர் ஒருவரை அவரின் மகன்களே நள்ளிரவில் கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்றுள்ளனர். கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் அகமது. இவர் விழுப்புரம் நகர்மன்ற தலைவராகப் பதவி வகித்தவர். நேற்று நள்ளிரவு சொத்து பிரச்சினை காரணமாக அகமதுவுடன், அவரின் மகன்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அகமதுவை அவரின் மகன்கள் கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று அதிகாலை 2 மணிக்கு அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்துள்ள மர்ம கும்பல் அவரை கொலை செய்ய முயன்றிருக்கிறது. இதையடுத்து அவர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளார். அப்போது சிந்தாமணி என்ற இடத்தில் காரை மறித்த மர்ம கும்பல், காரிலிருந்து இறங்கி ஓடிய அகமதுவைக் கழுத்தை அறுத்துள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த அகமதுவை அருகிலிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அகமது, விழுப்புரம் காவல் துறையினரிடம் வாக்கு மூலம் அளித்திருக்கிறார். அதில், ‘குடும்ப பிரச்சினை காரணமாக எனது மகன்கள் என்னைத் திட்டமிட்டு, கொலை செய்ய முயன்றுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார். சொத்து பிரச்சினைக்காகத் தந்தையை மகன்களே கொலை செய்யத் துணிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE