செவிலியருடன் 5 ஆண்டுகளாக காதல்... 3 மாதம் குடும்ப வாழ்க்கை: தாலி வாங்க சென்ற மின்வாரிய ஊழியர் எஸ்கேப்

By காமதேனு

திருமண ஆசைகாட்டி திருமணம் செய்யாமல் செவிலியருடன் 3 மாதங்கள் குடும்பம் நடத்திய மின்வாரிய ஊழியர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். பேரையூர் அருகே அனுப்பபட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (27). மின்வாரிய ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

கருப்பசாமியும், செவிலியராக பணியாற்றி வரும் அப் பெண்ணும் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமங்கலத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 13-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கருப்பசாமி தாலி மற்றும் சேலை வாங்குவதற்காக வெளியூர் சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண், கருப்பசாமி வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது கருப்பசாமியின் அண்ணன் முனுசாமி (30), தாய் முனியம்மாள்(50) ஆகியோர் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, அந்த பெண் நேற்று திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில், விசாரணை நடத்திய போலீஸார், கருப்பசாமி உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE