ஐதராபாத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த வாலிபர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். இந்த ஆணவக்கொலையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நீரஜ் குமார் பன்வார்(21). இவர் வேறு சாதியை சேர்ந்த பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதற்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்துள்ளது. இவர்களுக்கு இரண்டரை மாத ஆண் குழந்தை உள்ளது.
பேகம் பஜார் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் அருகே நீரஜ் குமார் பன்வார் தனது தந்தை ராஜேந்தர் பன்வாருடன் நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் அவரை சூழ்ந்து தேங்காய் வெட்டும் அரிவாளால் வெட்டினர். தந்தை கண் முன்பே நீர்ஜ் குமார் பன்வார் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து கர்நாடக எல்லையில் பதுங்கிருந்த 4 பேரை இன்று கைது செய்தனர். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர். இந்த கொலையில் நீரஜ் குமார் பன்வாரின் மனைவியின் குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஒரு மாதத்திற்குள் ஐதராபாத்தில் நடந்த இரண்டாவது ஆணவக் கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.