‘உன் அடையாளத்தைக் காட்டு’ எனக்கூறி மாற்றுத்திறனாளி முதியவரை பாஜக பிரமுகர் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் நேற்று அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த பாஜகவைச் சேர்ந்த தினேஷ் குஷ்வாஹா என்பவர், முதியவரைப் பார்த்து 'உங்கள் அடையாள அட்டையைக் காட்டுங்கள்' என்று கேட்டு அவரை மீண்டும் மீண்டும் தாக்கினார். இதில் அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த காட்சி சமூகவலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கொல்லப்பட்ட முதியவர் வேறு மதத்தைச் சேர்ந்தவராக இருப்பாரோ என்ற எண்ணத்தில் தினேஷ் குஷ்வாஹா தாக்கியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பாஜக பிரமுகரால் அடித்தே கொல்லப்பட்ட மாற்றுத்திறனாளி முதியவர் நீமுச் பகுதியைச் சேர்ந்த பன்வர்லால் ஜெயின் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கொலை குறித்து மானாச காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த சம்பவத்தின் வீடியோவை மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான திக்விஜய் சிங்கும் பகிர்ந்துள்ளார். அத்துடன் முதியவரைத் தாக்கியவர் பாஜகவைச் சேர்ந்த தினேஷ் குஷ்வாஹா என்றும் அவர் மீது 302வது பிரிவின் கீழ் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்தது என்றும், அவர் கைது செய்யப்படுவாரா இல்லையா என்பதைப் பார்ப்போம்" என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.