நாளை ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நினைவுநாள்: தூத்துக்குடியில் 2,500 போலீஸார் குவிப்பு

By காமதேனு

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது, காவல் துறையின் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிர் இழந்தனர். இவர்களின் நினைவுதினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தூத்துக்குடியில் 2500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளிமாவட்டத்தினருக்கு இந்த நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் இதுகுறித்துக் கூறுகையில், “நாளை ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் 4-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உட்கோட்டங்களில் காவல் துணை கண்காணிப்பாளரின் 30(2) காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளிமாவட்டத்தினர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதியில்லை.

இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வசப்பபுரம், பெரியதாழை, செய்துங்கநல்லூர், சங்கரன் குடியிருப்பு, வேம்பார், கோடாங்கிப்பட்டி, தொட்டிலோவன்பட்டி, பருத்திக்குளம், சென்னமரெட்டியார்பட்டி, சவலாப்பேரி உள்பட பல பகுதிகளிலும் சோதனைச் சாவடிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் போலீஸாரால் தீவிர வாகன தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக விரோதச் செயல்கள் யார் செய்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஸ்டெர்லைட் நினைவுதினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 9 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 37 காவல் ஆய்வாளர்கள் உள்பட 2500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE