நடுக்கடலில் 1,526 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: சிக்கிய குமரி மீனவர்களின் பின்னணி

By காமதேனு

லட்சத்தீவு அருகே அகத்தி தீவு அருகே நடுக்கடலில் 1,526 கோடி மதிப்பிலான ஹெராயின் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பத்துநாள்களுக்கும் மேலாக காத்திருந்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் ஹெராயினை பறிமுதல் செய்ததோடு, கடத்தி வந்த 20 பேரையும் கைது செய்தனர்.

கேரளத்தில் கடல் வழியே போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களும், கடலோரக் காவல் படையினரும் கேரள கடல்பகுதிகளில் முகாமிட்டு தொடர் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அவர்களுக்கு லட்சத்தீவு பகுதியில் கடத்தல் விசைப்படகு வந்துகொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்தனர். அப்போது 2 விசைப்படகுகளில் கடத்திவரப்பட்ட 1,526 கோடி மதிப்பிலான ஹெராயின்கள் பிடிபட்டது. இரு விசைப்படகுகளிலும் இருந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 16 பேர் குமரி மாவட்டத்தின் தூத்தூர், குளச்சல், வள்ளவிளை கடலோரக் கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவ்விரு விசைப்படகுகள் குமரி மாவட்டத்தின், வள்ளவிளை, சின்னத்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்களுடையது என்பதும் தெரியவந்தது. இதில் விசைப்படகின் உரிமையாளர் விஜயன் என்பவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்த போதைப்பொருள்கள் கடல்மார்க்கமாக, இந்தியாவுக்குள் நுழைவதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கையின் பேரிலேயே, இந்த கடல் சோதனை நடந்தது. இந்தத் திட்டத்திற்கு ஆபரேஷன் கோஜ்பீன் எனப் பெயரிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கப்பலில் வந்த ஹெராயின், அங்கிருந்து விசைப்படகுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த 13 நாள்களாக இந்த விசைப்படகிற்காக கடலிலேயே ஆபரேஷன் கோஜ்பீன் ஆதிகாரிகள் காத்திருந்தனர். நேற்று மாலை, இந்த ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கைதான இருபதுபேரும் இன்று எர்ணாக்குளம் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். மீன்பிடித் தொழிலுக்கு சென்றவர்களுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலோடு தொடர்பு ஏற்பட்டது எப்படி என விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE