ஐடி பெண்ணுடன் பாலியல் உறவு... இன்னொரு பெண்ணுடன் திருமணம்: சிக்கிய காதல் மன்னன்

By காமதேனு

பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த காதல் மன்னனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (பெயர் மாற்றம்). 21 வயதான இவர் இடையார்பாளையத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 11-ம் தேதி வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ஐஸ்வர்யாவின் தந்தை லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஐஸ்வர்யாவுடன் பணியாற்றிய லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் வாஞ்சிநாதன் வீதியைச் சேர்ந்த கணேஷ் (26) என்பவர் காதலித்து ஏமாற்றியது தெரியவந்தது. கடந்த 9 மாதங்களாக காதலித்து வந்துள்ளது இந்த காதல் ஜோடி. சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவை விடுதிக்கு அழைத்துச் சென்ற கணேஷ், யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார். அங்கேயே, ஐஸ்வர்யாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனிடையே, கடந்த 15-ம் தேதி கடலூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணை கணேஷ் திருமணம் செய்துள்ளார். இதை அறிந்த ஐஸ்வர்யா வீட்டில் எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஐஸ்வர்யாவின் வாக்குமூலத்தை பெற்ற காவல் துறையினர், தற்கொலை முயற்சி வழக்கினை நம்பிக்கை மோசடி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காதல் மன்னன் கணேஷை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதேபோன்று 5க்கும் மேற்பட்ட இளம்பெண்களை கணேஷ் காதலித்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பிறகு கணேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE