அதிகாரிகள் கொடுத்த மன உளைச்சலால் அலுவலகத்தில் உயிரை மாய்த்த பொறியாளர்: 2 நாட்களாக தேடி அலைந்த மனைவி!

By காமதேனு

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 2 நாட்களாக காணாமல் போன உதவி பொறியாளர் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்தவர் ஹரிகிருஷ்ணன் (40). இவரின் மனைவி மாலதி என்ற இளவரசி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த மூன்று வருடங்களாக உதவி பொறியாளராக ஹரிகிருஷ்ணன் வேலை செய்து வந்துள்ளார்.

அவர் அங்குள்ள அனல் மின்நிலைய குடியிருப்பில் தங்கி பணிக்குச் செல்வது வழக்கம். கடந்த திங்கள்கிழமை பணிக்கு வந்த ஹரிகிருஷ்ணன், இரண்டு நாட்களுக்கு முன் வரை அவரது மனைவியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதன்பிறகு, அவரிடத்தில் இருந்து எந்தவித தொலைபேசி அழைப்பும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தார் அனல்மின்நிலையம் வந்து விசாரித்தனர். ஹரிகிருஷ்ணனின் பை மற்றும் இருசக்கர வாகனம் அங்கு இருந்துள்ளது. பையில் கடிதம் இருந்ததாகவும், அந்த கடிதத்தில் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் எழுதியிருந்ததாக மின்வாரிய அலுவலர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், ஹரிகிருஷ்ணன் குடும்பத்தார் அனல் மின் நிலையம் முன்பாக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களின் உறவினர்கள் இரண்டு பேரை கூட்டிக் கொண்டு மின் நிலையத்தில் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கம்பெனியில் ஒரு பகுதியில் ஹரிகிருஷ்ணன் தூக்கில் தொங்கியபடி பிணமாக காணப்பட்டார். இதை கண்டு அவரது மனைவி மற்றும் அவரின் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து குறித்து அவர்கள் கூறுகையில்," இங்குள்ள ஒரு அலுவலர் ஹரிகிருஷ்ணனுக்கு மிகுந்த மனஉளைச்சலை தந்துள்ளார், அதன் காரணமாகத்தான் அவர் உயிர் இழந்திருக்க கூடும்" என்று சந்தேகப்படுகிறோம் என்றனர்.
இதுகுறித்து மீஞ்சூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து ஹரிகிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனல் மின் நிலையத்தில் உதவி பொறியாளர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE