போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்கு 200 ஏக்கர் நிலம் பட்டா: விஏஓ, மண்டல துணை தாசில்தார் சஸ்பெண்ட்!

By காமதேனு

தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் பட்டா போட்டு கொடுத்ததாக, மண்டல துணை தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகாவுக்கு உட்பட்ட தெ. புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர், மானாமதுரை மண்டல துணை தாசில்தார் உதவியுடன் தனிநபர் இடம் மற்றும் அரசு நீர்பிடிப்பு நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் தனிநபருக்கு புரோக்கர்களாக செயல்பட்டு விற்பனை செய்வதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது.

தன் மீது புகார் அளிக்கப்பட்டதை உயரதிகாரிகள் மூலம் அறிந்த மண்டல துணை தாசில்தார், மீண்டும் அரசு மற்றும் தனியார் நிலங்களின் ஆவணங்களை பழைய நிலைக்கு மாற்றியுள்ளார். இந்நிலையில், புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் நடத்திய விசாரணையில், சுமார் 200 ஏக்கர் தனியார் மற்றும் அரசு நிலங்களை, போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்கு பட்டா போட்டது தெரியவந்தது.

குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மண்டல துணை வட்டாட்சியர் சேகர் மற்றும் அவருக்கு உதவியாக செயல்பட்ட தெ. புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இதுபோன்று, மானாமதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் போலி ஆவணங்கள் தயாரிக்கும் அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE