சாலையோரத்தில் நின்றுக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஏற முயன்ற கூலித் தொழிலாளி, மின்னல் வேகத்தில் வந்த பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அனைவரையும் பதறவைத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே உள்ள தோக்கவாடியை சேர்ந்தவர் விஸ்வநாதன். கூலித் தொழிலாளியான இவர் அண்ணாநகரில் இருந்து திருச்செங்கோடு சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த பகுதியில் சாலை விரிவாக்கப்பணி நடந்து கொண்டிருந்ததால் விஸ்வநாதன் தனது இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்தார். பின்னர், இருசக்கர வாகனத்தில் அவர் ஏற முயன்றார். இதில் நிலைதடுமாறி விழுந்த விஸ்வநாதன் மீது மின்னல் வேகத்தில் வந்த தனியார் பேருந்து ஏறி இறங்கியது.
இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். ஆனால், பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், விஸ்வநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், தப்பிச் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.