நெல்லை கனிமவளத்துறை உதவி இயக்குனர் பணியிடை நீக்கம்

By காமதேனு

திருநெல்வேலி கல்குவாரி விபத்துச் சம்பவம் எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டக் கனிமவளத்துறை உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முறைகேடாக இயங்கும் குவாரிகளுக்கும் தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. கடந்த 14-ம் தேதி இரவு 350 அடி ஆழம் கொண்ட இந்தக் கல்குவாரியில் கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுவந்தபோது பாறைகள் சரிந்து விழுந்தன. அப்போது பணியில் இருந்த செல்வகுமார்(30), ராஜேந்திரன்(35), செல்வம்(27), விஜய்(27), ஆயன்குளத்தைச் சேர்ந்த முருகன்(23), மற்றொரு முருகன்(40) ஆகிய தொழிலாளர்கள் பாறை இடுபாடுகளில் சிக்கினர். இதேபோல் குவாரியில் இருந்து கல் ஏற்றிக்கொண்டிருந்த இரு லாரி, ஜேசிபி இயந்திரங்களும் சேதமாகின. இதில் முதலில் லேசான காயங்களுடன் முருகன், விஜய் இருவரும் மீட்கப்பட்டனர். 17 மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் மூன்றாவதாக செல்வம் என்பவர் மீட்கப்பட்டு, நெல்லை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதேபோல் நான்காவதாக மீட்கப்பட்ட மற்றொரு முருகனும் உயிர் இழந்தார். இந்த விபத்தில் இதுவரை மூன்று தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ளனர். மேலும் ஒருவரை மீட்கும் பணி 5-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

மூன்று தொழிலாளர்களின் உயிரைக் குடித்த குவாரி விவகாரத்தில் முன்னீர்பள்ளம் போலீஸார், குவாரி உரிமையாளர்களில் ஒருவரான சங்கர நாராயணனை ஏற்கெனவே கைது செய்திருந்தனர். தப்பியோடிய செல்வராஜ் என்ற மற்றொரு உரிமையாளரையும் தேடிவரும் போலீஸார், அவரது வங்கிக்கணக்கையும் முடக்கியுள்ளனர். இதேபோல் குவாரி மேலாளர் ஜெபஸ்டியானும் கைது செய்யப்பட்டுள்ளார். குவாரி விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 15 லட்சம் நிவாரண உதவித்தொகை அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த குவாரி விபத்து தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் உரிய ஆய்வு செய்யாதததும், முறைகேடாக குவாரி இயங்க உதவியதும் இவர் சஸ்பெண்டிற்கு காரணமானது.

முறைகேடாக இயங்கிய குவாரி

நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இன்று நிருபர்களிடம் கூறுகையில், “இந்தக் குவாரியில் இருந்து வெளியே கல் கொண்டு செல்வதற்கான உரிமம், கடந்த ஆண்டு மார்ச் மாதமே ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதேபோல் விபத்து நடந்த மறுநாளே குவாரிக்கான செயல்பாட்டு உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துவிட்டோம். நெல்லை மாவட்டத்தில் தாலுகா வாரியாக குழு அமைத்து குவாரிகளை ஆய்வுசெய்து வருகிறோம். முறைகேடாக இயங்கிய குவாரிகளுக்கு 20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE