வாகனத் தணிக்கையில் சிக்கிய வடமாநில ஏடிஎம் கொள்ளையர்கள்!

By கி.பார்த்திபன்

நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் இருவர் வாகனத் தணிக்கையில் சிக்கினர்.

நாமக்கல் அருகே புதுச்சத்திரம் பெருமாள்கோயில் மேட்டைச் சேர்ந்தவர் நடேசன். அங்கு அவருக்கு சொந்தமான கட்டிடத்தில் தனியார் வங்கி ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. கடந்த 4-ம் தேதி நள்ளிரவில் அந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர்கள் கியாஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த 4 லட்சத்து 90 ஆயிரத்து 500 ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர். அத்துடன் தடயங்களை அழிக்க மிளகாய் பொடியை தூவி விட்டுச் சென்றனர். புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ. சாய் சரண் தேஜ்ஸ்வி உத்தரவின் பேரில் 15 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நாமக்கல் - சேலம் சாலை ஏ. கே. சமுத்திரத்தில் தனிப்படை காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில். காரில் இருந்தது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் புரஜாபாத் (32), பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது இம்ரான் (28) எனத் தெரியவந்தது. இவர்கள் இவரும் தான் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களைக் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 1.58 லட்சம் ரொக்கம் மற்றும் கியாஸ் வெல்டிங் இயந்திரம், ஆக்சிஜன் சிலிண்டர், கடப்பாரை, கோடாரி மற்றும் கார் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி கூறுகையில், " சேலத்தில் வசிக்கும் சுரேஷ் புரஜாபாத் அங்கு டீ கடை நடத்தி வருகிறார். பிஹாரைச் சேர்ந்த முகம்மது இம்ரான் ஃபேஷன் டிசைனிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சுரேஷ் டீ கடைக்கு முகம்மது இம்ரான் வந்து செல்லும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. போதிய வருவாய் இல்லாததால் இருவரும் சேர்ந்து ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி கேமிரா, அலாரம் உள்ளிட்டவற்றின் இணைப்புகளைத் துண்டித்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதற்கு முன் இருவரும் கூட்டு சேர்ந்து மற்றொரு இடத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அது தோல்வியில் முடிந்துள்ளது. எனினும், இவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவாகவில்லை. இம்முறை வெற்றிகரமாக கொள்ளைத் திட்டத்தை அரங்கேற்றி சிக்கியுள்ளனர்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE