திருட்டு நகையில் காதலனுடன் உல்லாச பயணம்: தாயின் புகாரால் சிக்கிய காதலி

By காமதேனு

சொந்த வீட்டிலேயே நகைகளை திருடி காதலனுடன் உல்லாச பயணம் செய்த காதலி, தாயார் அளித்த புகாரில் பேரில் சிக்கியுள்ளார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள அம்ருதஹள்ளியில் வசித்து வருபவர் தீப்தி (24). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த தீப்தி, தனது தாயுடன் வசித்து வருகிறார். இதனிடையே, ஓட்டுநர் உரிமம் எடுக்க ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு சென்றுள்ளார் தீப்தி. அப்போது, மதன் (27) என்பவர் அவருக்கு கார் ஓட்ட பயிற்சி அளித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு பின்பு காதலாக மாறியது. மதனுக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்து மனைவி, 2 குழந்தைகள் இருப்பது தெரிந்திருந்தும் மதனை, தீப்தி காதலித்து வந்துள்ளார்.

இதனிடையே, பணக்கஷ்டத்தில் சிக்கி தவித்துவந்த தனது காதலனுக்கு வீட்டில் இருந்த நகைகளை திருடி கொடுத்துள்ளார் தீப்தி. அந்த நகையை அடகுவைத்து இவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக சுற்றி வந்துள்ளனர். இதனிடையே, வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனது பற்றி மகளிடம் கேட்டுள்ளார் அவரது தாயார். அவர் சரியாக பதில் சொல்லாததால், அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் ஒரு கிலோ நகைகளை திருடியதாக மகள் மீது அவரது தாயார் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், நகைகளை திருடி காதலனுக்கு தீப்தி கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து ரூ.36 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்ததுடன், நகை அடகு வைத்த பணத்தில் அவர்கள் வாங்கிய 3 கார்களையும் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE