வியாபாரிகள் போல வேடமிட்டு 25 கோடி மதிப்பிலான தொன்மையான பச்சைக்கல் லிங்கத்தைக் கடத்தல்காரர்களிடமிருந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை, பூந்தமல்லி அருகே தொன்மையான பச்சைக்கல் லிங்கத்தைச் சிலர் பதுக்கி வைத்திருப்பதாகவும். அந்த பச்சைக்கல் லிங்கத்தைக் கடத்த அவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் சிலை கடத்தல் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தை ஆய்வு செய்து சிலையைக் கைப்பற்றுமாறு சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வியாபாரிகள் போல வேடமிட்டுச் சென்றுள்ளனர். பச்சைக்கல் லிங்கத்தை வாங்க வந்திருப்பதாகக் கூறி சிலை கடத்தல்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலை கடத்தல்காரர்களும், ‘இது அரியவகை பச்சைக்கல் லிங்கம். இதன் சந்தை மதிப்பு 25 கோடி’ எனத் தெரிவித்திருக்கிறார்கள். சிலையைப் பார்க்க வேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுக்க, கடத்தல்காரர்களும் மறைத்து வைத்திருந்த சிலையைக் காண்பித்தனர். அப்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிலிருந்து நாங்கள் வந்திருப்பதாக கூறிக் கடத்தல்காரர்களைச் சுற்றிவளைத்தனர். சிலையை விற்க முயன்ற சென்னையை சேர்ந்த பக்தவச்சலம் (எ) பாலா, பாக்யராஜ் ஆகியோரிடமிருந்து அந்த பச்சைக்கல் லிங்கத்தை காவல் துறையினர் கைப்பற்றினார்கள். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குற்ற எண் 13/2122-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.