அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் கொலையில் என்ன நடந்தது?- வெளியானது சிசிடிவி காட்சி

By காமதேனு

திருவள்ளூர் பகுதியில் கூலிப்படையினரால் ஊராட்சி மன்றத் தலைவர் கொல்லப்பட்ட சம்பவ சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து கூலிப்படையினரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கொலை செய்யப்பட்ட மனோகரன்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த கொண்டகரை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மனோகரன். இவர் இரண்டாவது முறையாக கொண்டகரை ஊராட்சியின் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். கடந்த 15-ம் தேதி இரவு மனைவி சர்மிளா, மகன் ரக்சன் மற்றும் மகள் ரக்சிதா ஆகியோருடன் குருவி மேடு கிராமத்தில் நடந்த மஞ்சள் நீராட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்த நிலையில் அவர்கள் நால்வரும், காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அங்கிருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று அவர்களின் காரின் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை அருகே உள்ள பள்ளத்தில் சிக்கியது.

கொலை

அப்போது லாரியிலிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுமார் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் குதித்தது. பின்பு அவர்கள் கார் கண்ணாடியை உடைத்து மனோகரனைச் சரமாரியாக வெட்டினர். தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்த வெட்டுக்காயம் காரணமாக மனோகரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை நேரில் கண்ட அவரின் குடும்பத்தினர் அலறி துடித்தனர். மனோகரன் உயிர் பிழைக்க முடியாது என்ற நிலையில் அந்த மர்ம கும்பல் அதே லாரியில் அங்கிருந்து தப்பிச் சென்றது. உயிருக்குப் போராடிய மனோகரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். ஆனால் மனோகரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து மனோகரனின் ஆதரவாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி மீஞ்சூர் மணலி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். கொலையாளிகளைப் பிடிக்க செங்குன்றம் உதவி காவல் ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவன ஒப்பந்தம், ரியல் எஸ்டேட், ஸ்கிராப் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த அவருக்கு விரோதிகள் அதிக அளவு இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய லாரியை அத்திப்பட்டு புதுநகர் அருகே காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் காவல் துறையினர் இன்று வெளியிட்டுள்ளனர். காரின் மீது டிப்பர் லாரி மோதுவதும், தொடர்ந்து காரை துரத்துவதும் சிசிடிவி பதிவுகளில் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE