ஒரு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை: பதற வைக்கும் 13 வயது சிறுவனின் வாக்குமூலம்!

By காமதேனு

பக்கத்து வீட்டுக்கார் அடித்தார் என்பதற்காக அவரது ஒரு வயது பெண் குழந்தையின் கால்களில் கற்களைக் கட்டி தண்ணீர் தொட்டிக்குள் போட்டுக் கொலை செய்த 13 வயது சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த பெயின்ட் கடை வியாபாரி கேசவ் ராகுல். இவரது ஒரு வயது பெண் குழந்தை நேற்று காணாமல் போனது. அக்குழந்தையை பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடினர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தையைத் தேடினர்.

அப்போது அப்பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் குழந்தை அணிந்திருந்த சட்டை கிடந்தது. இதையடுத்து அந்த பள்ளி முழுவதும் போலீஸார் சோதனை செய்தனர்.
அப்போது பள்ளியின் தண்ணீர் தொட்டியில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது குழந்தையின் கால்களில் செங்கற்கள் கட்டப்பட்டிருப்பதைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

குழந்தையைக் கொலை செய்து தண்ணீர் தொட்டியில் போட்டது என விசாரணை நடத்தினர். அப்போது கேசவ்ராகுலின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 13 வயன் சிறுவன் மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவனிடம் விசாரணை நடத்திய போது, குழந்தையைக் கொலை செய்ததை அவன் ஒப்புக்கொண்டான்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," ஒரு வாரத்துக்கு முன்பு கேசவ் ராகுலின் வீட்டு வாசலுக்கு அருகே தனது சைக்கிளை சிறுவன் நிறுத்தியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த கேசவ்ராகுல், சிறுவனைத் தாக்கியதுடன், அவனது பெற்றோரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், கேசவ் ராகுலின் குழந்தையைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளான். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கடத்திச் சென்று அதன் கால்களில் செங்கற்களை கட்டி தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளான். அவனைக் கைது செய்து சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் " என்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE