நடுரோட்டில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் பட்டாக்கத்தியுடன் தாக்கிக் கொண்டனர். இதனை பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல விவகாரத்தில் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் நடுரோட்டில் ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்கள் தாக்கி கொள்வதுடன், பொதுமக்கள் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் வாட்ஸ்அப் குழு அமைத்து அவர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை பூந்தமல்லி நெடுஞ்சாலை சிக்னல் அருகே பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் திருத்தணி ரூட் மாணவர்கள் மற்றும் பூந்தமல்லி ரூட் மாணவர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் கத்தி, பாட்டில், கற்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இதனால் சாலையில் சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து பொதுமக்கள் காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல் துறையினர் அங்கு சென்றவுடன் மாணவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் உஷார் படுத்தப்பட்டு பச்சையப்பன் கல்லூரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில், காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சந்தேகத்திற்கிடமாக சுற்றிய மாணவர்கள் 6 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கீழ்ப்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே மாணவர்கள் வைத்திருந்த பையில் இருந்து 8 பட்டாக்கத்திகள் மற்றும் காலி பாட்டில்களை காவல் துறையினர் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரியில் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ரயில்வே காவல் துறையினர் விழிப்புணர்வு நிகழச்சி நடத்திய நிலையில் இன்று நடந்த மாணவர்கள் மோதல் சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.