சென்னை மெரினா கடற்கரை மணலில் புதைத்துவைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த 3 பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திராவில் இருந்து சாராயம் வாங்கி வந்து விற்பனை செய்த அவர்களிடம் இருந்து 35 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் சாராயம் புதைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மெரினா கடற்கரையில் நேதாஜி சிலை, கண்ணகி சிலைக்கு இடைப்பட்ட மணற்பரப்பில் கள்ளச்சாராயம் புதைத்து வைத்திருந்த கள்ளச் சாராயத்தை தோண்டி எடுத்தனர்.
2 லிட்டர், அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்களில் பதுக்கி வைத்திருந்த 35 லிட்டர் கள்ளச் சாராயத்தை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சாராயத்தை மணலில் புதைத்து வைத்து விற்பனை செய்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைஜென்தூஸ் கோஸ்லயா, சில்பா போஸ்லே, சுனந்தா ஆகிய 3 பேரை கைது செய்து மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் அவர்களுடன் வசித்து வந்த 35 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாடோடிக்கள் குடும்பமாக தங்கி வந்ததும், இவர்கள் ஆந்திராவில் இருந்து சாராயம் வாங்கி வந்து மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் உள்ள மணலில் புதைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
சென்னையில் கஞ்சா, உள்ளிட்ட போதை வஸ்துக்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது கள்ளச்சாராயம் விற்பனையால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.