வீட்டில் ஒன்றும் கிடைக்காததால் ஆத்திரம்: நள்ளிரவில் இளம் பெண்ணுக்கு கொள்ளையனால் நடந்த கொடுமை

By காமதேனு

சென்னையில் கொள்ளையடிக்க சென்ற வீட்டில் பொருட்கள் ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்த இளம் பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த கொள்ளையனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில் தாய், அக்கா ஆகியோருடன் 22 வயதுடைய பெண் வசித்து வருகின்றார். நள்ளிரவு வீட்டில் புகுந்த கொள்ளையன் கத்திமுனையில் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் குன்றத்தூர் காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கொள்ளையன் குறித்த அடையாளங்களை கேட்டறிந்தனர். அப்போது, வீட்டிற்குள் புகுந்த நபர் கஞ்சா போதையில் இருந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். இதனை வைத்து காவல் துறையினர் கஞ்சா போதையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக சேகரித்துள்ளனர். பின்னர் இந்த புகைப்படங்களை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காண்பித்த போது, குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த சதீஷ் (19) இந்த சம்பவத்தில் ஈடுபட்டதை காவல் துறையினர் உறுதி செய்தார்.

இதையடுத்து சதீஷ்சை காவல் துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை பகுதியில் பதுங்கி இருந்த சதீஷ்சை காவல் துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதே பகுதியில் உள்ள தண்ணீர் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். வேலைக்கு செல்லும் போது பாதிக்கப்பட்ட பெண் வீட்டின் பால்கனியில் நின்று செல்போனில் பேசுவதை பார்த்தபடி சென்றுள்ளார் சதீஷ். மேலும் பூட்டிய வீடு மற்றும் ஆண்கள் யாரும் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதில் சதீஷ் கைதேர்ந்தவர் என்பதால் அந்த பெண் வீட்டில் உள்ளவர்கள் குறித்து விசாரித்துள்ளார்.

அந்த வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாததை உறுதி செய்த சதீஷ், கஞ்சா போதையில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து கதவை தட்டியுள்ளார். அப்போது அந்த பெண், அக்காதான் கதவை தட்டுகிறார் என நினைத்து கதவை திறந்தவுடன் பெண்ணை முகத்தில் பலமாக தாக்கி விட்டு அறைக்குள் நுழைந்த சதீஷ் உடனே கதவை சாத்தி கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணிடம் வீட்டில் இருக்கும் செல்போன், பணம், நகையை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் தன்னிடம் ஏதும் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த சதீஷ், போதையில் கத்தியை காட்டி மிரட்டி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் தனக்கு இரண்டு நாட்களில் ரூ.10 ஆயிரம் தயார் செய்து கொடுக்க வேண்டுமென்றும், நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

போலீஸ் பிடியில் இருந்து சதீஷ் தப்பி ஓடும் போது தவறி கீழே விழுந்ததில் ஒரு

கை, காலில், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. திருட சென்ற இடத்தில் நகை, பணம் இல்லாததால் இளம் பெண்ணை கொள்ளையன் பாலியல் வன்கொடுமை செய்த விட்டு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE