வாட்ஸ் அப் மெசேஜ் வினையானது: மாணவியை அடித்துக் கொலை செய்து உடலை எரித்த மாணவர்கள்!

By காமதேனு

வாட்ஸ் அப்பில் மதம் தொடர்பான கருத்தைப் பதிவிட்ட மாணவியை சக மாணவர்கள் கல்லால் அடித்துக் கொலை செய்து அவரது உடலை எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சோகோடோ மாகாணத்தில் பள்ளி உள்ளது. இப்ள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் வாட்ஸ் அப் குழு வைத்துள்ளனர். இந்நிலையில் மாணவி ஒருவர் குறிப்பிட்ட ஒரு மதத்தை இழிவுபடுத்தும் வகையிலான நேற்று முன்தினம் கருத்துகளை அந்த வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட அந்த மதத்தைச் சேர்ந்த மாணவர்கள், அந்த மாணவியை சரமாரியாகத் தாக்கினர். தகவலறிந்து வந்த போலீஸார், அந்த மாணவியைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், போலீஸாரை கல்லால் அடித்து விரட்டியதுடன், மாணவியையும் கல்லால் அடித்துக் கொலை செய்தனர். அத்துடன் அந்த மாணவி உடலை தீவைத்து எரித்தனர். இதன் பின் போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் மாணவர்களை விரட்டியடித்தனர்.

இதையடுத்து சோகோடோ மாநில ஆளுநர் அமினு தம்புவால் சம்பந்தப்பட்ட பள்ளியை மூட உத்தரவிட்டார். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் கல்வி அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் நைஜீரியாவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE