2,500 ஏக்கர் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிய மோசடி மன்னன்!- அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்கள்

By என்.சுவாமிநாதன்

தூத்துக்குடி மாவட்டத்தில் முறைகேடாக தனியொரு நபரின் பெயருக்கு 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் மாற்றப்பட்டிருக்கும் சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடியில் சார்பதிவாளர் அலுவலக பணியாளர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா

தூத்துக்குடி மாவட்டத்தின், வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு செலுக்கன்பட்டி ஆகிய ஊரில் உள்ள மொத்த சொத்துகளும் தனி ஒரு நபரின் பெயரிலும், அவரது நிறுவனத்தின் பெயரிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இயங்கும் ஆதிதேவ் கிரீன் டெக் அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் மேலாண்மை இயக்குநர் அன்புராஜ் கிஷோர் அந்த மொத்த நிலங்களையும் வாங்கியதாக புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி மொத்த கிராமத்தில் இருக்கும் வீடுகள், விவசாய நிலங்கள் என சற்றேறக்குறைய 2,500 ஏக்கர் பகுதிகள் அன்புராஜ் கிஷோர் என்னும் தனிநபர் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பாஜக இவ்விசயத்தை கையில் எடுத்தது. முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா, சார்பதிவாளர் சுந்தரலிங்கத்திடம் முறையிட்டார். அப்போது சசிகலா புஷ்பாவிடம், சார்பதிவாளர் இது ஏதோ தவறுதலாக நடந்திருக்கிறது. ஒரேநாளில் இதை ரத்து செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா புஷ்பா காமதேனு இணையத்திடம் கூறுகையில், “திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் யாருடைய நிலமும் பாதுகாப்பாக இருப்பது இல்லை. அதற்கு இப்போது இந்த இருகிராமங்களும் உதாரணம். மூன்று தலைமுறையாக இந்த கிராம மக்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்களின் சொத்துகளை திமுக அராஜகமாக இன்னொரு தனிநபர் பெயரில் மாற்றியுள்ளது. பாஜக, இவ்விசயத்தில் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்கும்” என்றார்.

பட்டா நிலங்கள், அதுவும் 2,500 ஏக்கர் நிலங்கள் தனியொரு நபரின் பெயரில் மாற்றப்பட்டதன் பிண்ணனி குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE