போலீஸ் துப்பாக்கியுடன் வைரலான கைதியின் உறவினர் படங்கள்!- அதிர்ச்சியில் காவல்துறை!

By காமதேனு

காவலரின் துப்பாக்கியுடன் கைதியின் உறவினர் செல்போனில் படம் எடுத்து இணையத்தில் வைரலாக்கியதையடுத்து இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்பரசன் மற்றும் ஆறுமுகவேல் ஆகிய இருவரும் இருக்கன்குடி காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் கிளைச் சிறையில் இருக்கும் விசாரணைக் கைதி ஜான்பாண்டியன் என்பவரை விருதுநகர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் ஜான்பாண்டியனை ஆஜர்படுத்திய அந்த காவலர்கள் வெளியே சென்று டீ குடிக்க கிளம்பினார்கள். அப்போது அவர்கள் கையிலிருந்த துப்பாக்கியை ஜான்பாண்டியன் உறவினர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு டீக்கடைக்குச் சென்றிருக்கிறார்கள். கையில் துப்பாக்கிகள் வந்ததும் குதூகலமடைந்த அவர் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு விதவிதமாக செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாமல் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளத்தில் அந்த படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் அப்பகுதியில் வைரலாகி விருதுநகர் காவல்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இதில் தொடர்புடைய காவலர்களிடம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து விருதுநகர் எஸ்.பி மனோகரன் கைதி உறவினர்களிடம் அஜாக்கிரதையாகத் துப்பாக்கியைக் கொடுத்த அன்பரசன் மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE