கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்கு முறையான அனுமதி பெறாமல் அதிகளவில் கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் அவ்வப்போது காவல் துறையின் சார்பில் ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கேரளாவிற்கு உரிய ஆவணங்கள் இன்றி கனிமவளங்கள் கொண்டுசெல்லப்பட்ட 14 லாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்தில் இருந்து அதிகளவிற்கு பாறாங்கற்கள், எம் சாண்ட் போன்ற கனிமவளங்கள் கேரளத்திற்கு தொடர்ச்சியாகக் கடத்தப்படுகின்றன. கேரளத்தில் மலைகளை உடைப்பதற்குத் தடை இருப்பதால் இங்கிருந்து கனிமவளங்கள் கேரளத்திற்கு கொண்டு செல்லப்படுவதும், கடத்தலும் தொடர்ந்து வருகின்றது. இதில் ஒரே ஒரு முறை செல்லத்தக்க பாஸை வைத்துக்கொண்டும், அதிகளவில் முறைகேடுகள் நடக்கிறது. இந்நிலையில் களியக்காவிளை, மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மார்த்தாண்டம் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீஸார் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரளத்திற்கு கடத்துவதற்காக அதிக எடையுள்ள கற்களை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரிகள் வந்தன. அதில் உரிய ஆவணங்கள் இன்றியும், அதிக பாரத்துடனும் வந்த 14 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. உரிய ஆவணங்கள் இன்றி கேரளத்திற்கு கனிமவளங்களைக் கொண்டு சென்ற லாரிகளுக்கு மொத்தமாக 2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல் காவல்துறையினர் தினசரி வாகன தணிக்கையில் ஈடுபட்டால் மட்டுமே குமரிமாவட்டத்தின் இயற்கை வளங்கள் காக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.