`எங்கள போலீசில் பிடிச்சுக் குடுத்திடுவியா... சொருகிடுவேன்'- கடைக்காரரை மிரட்டிய போதை வாலிபர்கள்

By காமதேனு

பொருள் வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் பெட்டிக் கடைக்காரரை போதையில் வாலிபர்கள் மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கஞ்சா வேட்டை ஆப்ரேஷன் மூலமாக போதை பொருட்களை ஒழிக்க தமிழக காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் தமிழகத்தில் பல இடங்களில் கஞ்சா விற்பனை புழக்கத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று மாநில கல்லூரி வளாகத்திற்குள்ளே மூன்று கல்லூரி மாணவர்கள் கஞ்சா புகைப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை பாரிமுனை கொத்தவால்சாவடி மார்க்கெட்டில் உள்ள பெட்டிக்கடையில் கஞ்சா போதையில் இரு இளைஞர்கள் கடைக்காரரை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கஞ்சா போதையில் இரு இளைஞர்கள் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் தராமல் கடையின் உரிமையாளரை மிரட்டுவதுடன் காவல் துறையினரை ஆபாசமாக திட்டியுள்ளனர். "எங்களை போட்டோ எடுக்கிறீயா. எங்கள போலீசில் பிடிச்சுக் குடுத்திடுவியா... சொருகிடுவேன்?" என்று கடை உரிமையாளரை ஒருமையில் பேசுகின்றனர். பின்னர் கடை உரிமையாளர் பைசல் ரஹ்மானை இரு இளைஞர்களும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பைசல் ரஹ்மான் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதே போல அப்பகுதி முழுவதும் போதை ஆசாமிகள் மிரட்டி வருவதாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

VIEW COMMENTS