ஒவ்வொரு தவணைக்கும் லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்!: மோடி வீடு கட்டும் திட்டத்தால் உயிரை மாய்த்த வாலிபர்

By காமதேனு

பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டத்தில் அரசு ஊழியர் லஞ்சம் கேட்டதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுதகுடியைச் சேர்ந்தவர் மணிகண்டன். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மணிகண்டன் வீடு கட்டி வந்தார். பல்வேறு தவணைகளாக தொகையைப் பெற்று வீடு கட்டப்படும் நிலையில் திட்டத்தின் இரண்டாவது தவணைத் தொகையை விடுவிக்க நன்னிலம் ஒன்றிய பணி பார்வையாளர் மகேஸ்வரன் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.
இதன்படி 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், பணத்தைக் கொடுத்தும் இரண்டாவது தவணை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார். அவர் உடனடியாக காரைக்கால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், உயிரிழந்தார். சாவதற்கு முன்பு வீடு கட்ட லஞ்சம் கேட்டது தொடர்பாக மணிகண்டன் பேசிய வீடியோ வைரலானது.

இந்நிலையில் லஞ்சம் கேட்ட மகேஸ்வரனை சஸ்பெண்ட் செய்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தவணைத் தொகையை கொடுக்க லஞ்சம் கேட்டதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE