வயிற்றில் 4 கோடி மதிப்புள்ள போதை கேப்சூல்கள்!- விமான நிலைய அதிகாரிகளை பதறவைத்த பெண்

By காமதேனு

விமானத்தில் வரும் பெண்ணின் வயிற்றிலிருந்து சுமார் 4 கோடி மதிப்பிலான போதை கேப்சூல்கள் இருப்பதாக வந்த ரகசியத் தகவலை அடுத்து, அந்தப்பெண் விமான நிலைய ஊழியர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் வயிற்றிலிருந்து 81 போதைப் பொருள் அடங்கிய கேப்சூல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கோவை விமான நிலையம்

ஷார்ஜாவிலிருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது. கடந்த 6-ம் தேதி ஷார்ஜாவிலிருந்து கோவை வரும் விமானத்தில் பயணம் செய்யும் பெண் ஒருவர் போதைப் பொருள்களைக் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து உஷாரான சுங்க அதிகாரிகள் அந்த விமானம் வருகைக்காக காத்திருந்தார்கள். பயணிகளைச் சோதனையிடும் போது உகாண்டா நாட்டிலிருந்து வந்த நன்டசா என்ற பெண்ணின் மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண் தனிமைப்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சுங்கத்துறை விசாரணையின் போது, திருப்பூர் பின்னலாடை தொழிலதிபர்களைச் சந்திக்க வந்திருப்பதாக அந்த பெண் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் சுங்க அதிகாரிகள் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வந்திருக்கிறார்கள். பிறகு சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணின் வயிற்றை ஸ்கேன் செய்யக் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது வயிறு முழுக்க கேப்சூல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரின் வயிற்றிலிருந்து 2 நாள்களில் 81 கேப்சூல்களை சுங்கத்துறையினர் கைப்பற்றி இருக்கிறார்கள். இதையடுத்து அந்த கேப்சூல்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆய்வின் முடிவில் மெத்ராபெத்தமின் என்ற போதைப்பொருள் என்பது தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு 4 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பெண்ணை சென்னை புழல் சிறையில் அடைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE