சாதி குறித்து கேலி… தீயில் தள்ளிய சக மாணவர்கள்!- 6ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடுமை!

By காமதேனு

ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனை சகமாணவர்கள் சாதிப் பெயரைச் சொல்லி கேலி செய்து, தீயில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த காட்டுசிவிரி பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். பழங்குடி இருளர் வகுப்பைச் சேர்ந்த இவரின் மகன், சுந்தர்ராஜ் அதே பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்றுவருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுந்தர்ராஜ் பள்ளிக்குச் செல்லும் போது சகமாணவர்கள் அவரின் சாதி குறித்து கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சுந்தர்ராஜன் அப்போதே தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் நேற்று சுந்தர்ராஜ் அப்பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார். இதைக் கண்ட மாணவர்கள் சிலர் சுந்தர்ராஜின் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியிருக்கிறார். மேலும் அவரை அருகில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் தள்ளியிருக்கிறார்கள். தீக்காயங்களுடன் தீயிலிருந்து மீண்ட சுந்தர்ராஜ் அருகிலிருந்த குடிநீர்த் தொட்டியில் தனது உடலை நனைத்துக் கொண்டு உயிர் தப்பியுள்ளார். இதையடுத்து தீயில் தள்ளிய மாணவர்களே சுந்தர்ராஜை அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

தீக்காயம் அடைந்த சுந்தர்ராஜ் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளிமேடு பேட்டை காவல்நிலையத்தில் சுந்தர்ராஜனின் தந்தை கன்னியப்பன் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE