செல்போனை பறித்து மின்னல் வேகத்தில் பைக்கில் சென்ற திருடர்கள்... சுவரில் மோதி பறிபோன உயிர்கள்

By காமதேனு

சென்னை ராஜாஜி சாலை இந்தியன் வங்கி அருகே நேற்று மதியம் புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த கார்த்திக் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கார்த்திக்கின் செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். அப்போது கார்த்திக் செல்போன் கொள்ளையர்களை பிடிக்க விரட்டி சென்ற போது தவறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றார். பின்னர் கார்த்திக் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, தலைமைச் செயலகம் அருகே கொடிமர இல்ல சாலை வழியாக வாலிபர்கள் வேகமாக ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஒன்று அருகே இருந்த மின்மாற்றி சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் வந்த இரு வாலிபர்கள் 10 அடி தூரத்திற்கு வீசப்பட்டனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனே போக்குவரத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த கொத்தவால் சாவடி போக்குவரத்து போலீஸார் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

பின்னர் போலீஸார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது கார்த்திக் என்பவரிடம் செல்போன் பறித்து கொண்டு தப்பி ஓடியபோது வாலிபர்கள் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. செல்போன் பறிப்பு திருடர்களை அடையாளம் காணவேண்டி கார்த்திக்கை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து உயிரிழந்த வாலிபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். கார்த்திக் கூறிய அங்க அடையாளங்களை வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் விபத்தில் உயிரிழந்த இருவர் என தெரியவந்தது.

இச்சாலை விபத்தில் உயிரிழந்த இருவரில் ஒருவருக்கு முகம் முழுவதும் சிதைந்து காரணத்தினாலும், மற்றொரு வாலிபரை பற்றிய தகவல் கிடைக்காததாலும், இறந்தவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் செல்போன் பறிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் திருட்டு வாகனம் என்பதும், அதில் நம்பர் பிளேட்டுகள் உடைந்து உள்ளதால் வாகனத்தை வைத்தும் இறந்த வாலிபர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இறந்த இருவரும் செல்போன் திருடர்கள் என்பதால் போலீஸார் பேஸ்டேக்கர் மென்பொருளைக் கொண்டு இறந்தவர்களின் முகத்தை புகைப்படம் எடுத்து பழைய வழக்குகள் உள்ளதா என்று போலீஸார் சோதனை செய்தனர். குறிப்பாக பேஸ்டேக்கர் குற்றவாளிகள் முகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிகளையும் புள்ளிகளாக பதிவு செய்து வைத்திருக்கும், அந்த வகையில் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி முகத்தின் ஒரு சில புள்ளிகள் மூலம் இறந்த வாலிபரை அடையாளம் கண்டுவிடலாம் என போலீஸார் முயற்சித்த போது அதுவும் தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து போலீஸார் செல்போன் பறிப்பு சம்பவத்திற்கு முன்னதாக பலியான வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பதிவான மற்ற சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்களை பற்றிய தகவலை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், கொத்தவால்சாவடி போக்குவரத்து விபத்து தொடர்பான வழக்கும், வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் செல்போன் பறிப்பு வழக்கும் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த வாலிபர்கள் அடையாளம் கண்டுப்பிடித்த பின்னரே அவர்கள் குறித்த விவரங்கள், அவர் மீதுள்ள வழக்குகள் குறித்த விவரம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE