சிறையில் சமையல் வேலை... வெடித்து சிதறிய குக்கர்: கைதிக்கு நடந்த சோகம்

By காமதேனு

சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதி ஒருவர் குக்கர் வெடித்து காயம் அடைந்த சம்பவம் சிறை வட்டாரத்தையே பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது. மேலும் காயம் அடைந்த கைதிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாணியம்பாடி கிளை சிறைச் சாலை

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்ப்பேட்டை, ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். கடந்த 31.03.2022 அன்று கள்ளச் சாராயம் விற்பனை செய்த வழக்கில் ஜோலார்பேட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை கைதியாக வாணியம்பாடியில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கோவிந்தராஜைச் சமையல் வேலைகளில் சிறைத் துறையினர் ஈடுபடுத்தி வந்திருக்கிறார்கள். காய்கறி வெட்டிக் கொடுப்பது, சமையலுக்கு உதவியாக இருப்பது என பல்வேறு வேலைகளை அவர் செய்து வந்திருக்கிறார்.

சிகிச்சையில் கோவிந்தராஜ்

வழக்கம் போல இன்று சமையலறைக்குச் சென்ற கோவிந்தராஜ் சமையல் அறையிலிருந்த குக்கரைத் திறந்துள்ளார். உயர் அழுத்தத்திலிருந்த குக்கர் திடீரென வெடித்ததாகச் சொல்லப்படுகிறது. குக்கர் மூடி மற்றும் குக்கரிலிருந்த சூடான நீர் கோவிந்தராஜ் முகத்தில் வேகமாகப் பாய்ந்திருக்கிறது. இதனால் அவரின் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து சிறை நிர்வாகத்தினர் கோவிந்தராஜை உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE