மதுரை சிறைக்குள் கஞ்சா நடமாட்டம்: மோதிக் கொண்ட கைதிகள்

By காமதேனு

மதுரை மத்திய சிறைக்குள் கஞ்சா கேட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயம் அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (எ) மண்ட தினேஷ். அதே பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் குற்ற வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் நேற்று (மே 8) மாலை கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவரிடம் கஞ்சா கேட்டதாக கூறப்படுகிறது. இதில், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த கைதிகள் சிறையினுள் மோதிக் கொண்டனர்.

மோதலில் சையது இப்ராஹிம், மண்ட தினேஷ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சிறையில் மேலும் பிரச்சினை எழாத வண்ணம், கைதிகளுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கைதிகளுக்கிடையே நடந்த மோதல் தொடர்பாக சிறைதுறையினர் சார்பாக கரிமேடு காவல் நிலையத்தில் முறையாக புகார் எதுவும் பதியப்படவில்லை என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE