சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத் துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து அதிகாரிகள் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கத்தார் தலைநகர்தோகாவிலிருந்து, இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்தது.
அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக சுற்றுலா விசாவில் வந்த கென்யா நாட்டை சேர்ந்த 30 வயதுடைய இளம் பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பெண் சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பெண் பயணியை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது, பெண் பயணி ஷூக்களில் 2.2 கிலோ போதைப் பொருளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில், அது உயர் ரக கொக்கைன் போதைப் பொருள் என்பதும், சர்வதேச மதிப்பு ரூ.22 கோடி எனவும் தெரியவந்தது.
அந்த பெண் பயணியை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அவர் சர்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. சென்னையில் யாரிடம் போதைப் பொருளை கொடுக்க வந்தார் எனவும், சென்னையில் சர்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் உள்ளனரா எனவும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.