பாகிஸ்தான் டிரோன் இந்திய எல்லையில்!: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

By என்.சுவாமிநாதன்

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் டிரோன் ஒன்று நுழைந்தது. உடனே இதைக் கவனித்த பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இச்சம்பவம் எல்லையில் லேசான பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்திய எல்லைக்குள் அடிக்கடி டிரோன்களை அனுப்புவதை பாகிஸ்தான் வழக்கமாக வைத்திருக்கிறது. இப்படி எல்லைமீறும் பாகிஸ்தான் டிரோன்களை சுட்டு வீழ்த்தவே, நம் ராணுவ வீரர்களுக்கும் பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்முவில் உள்ள அரினா செக்டார் பகுதியில் இருக்கும் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு சின்னன்ஞ் சிறிய அளவிலான டிரோன் ஒன்று நுழைந்தது.

அதில் குட்டி, குட்டி லைட்களில் இருந்து சிறிய அளவில் வெளிச்சம் வந்ததால் எல்லை பாதுகாப்புப் படையினர் உஷார் ஆகினர். அது பாகிஸ்தானில் இருந்து வந்ததைக் கணித்தவர்கள் அதை நோக்கி சுட்டனர். உடனே அது மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே சென்றுவிட்டது. இதுகுறித்து, எல்லை பாதுகாப்புப்படை இயக்குனர் சாந்தணு, ‘இந்த டிரோனை பாகிஸ்தானில் இருந்து ரிமோட் மூலம் இயக்கியுள்ளனர். அதனால் தான் துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் ரிமோட்டை இயக்கி மீண்டும் பாகிஸ்தானுக்கே டிரோனைக் கொண்டு சென்றுவிட்டனர். இருந்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பாகிஸ்தான் ராணுவமா அல்லது தீவிரவாதிகளா? எனவும் விசாரித்து, ஆய்வு செய்து வருகிறோம். டிரோன் மூலம் ஏதேனும் பொருள்களை இந்திய எல்லைக்குள் போட்டுள்ளனரா? எனவும் ஆய்வு நடக்கிறது.”எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE