உயிரைப் பறித்த ஆன்லைன் சூதாட்டம்: துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை

By ரஜினி

ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த சோகத்தில் அம்பத்தூரில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆயுதப்படை காவலர் சரவணகுமார்(30). இவர் கடந்த 2013-ம் ஆண்டு தமிழக ஆயுதப்படையில் பணிக்குச் சேர்ந்தார். 6 மாதத்திற்கு முன்பு இவருக்கு ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து திருமுல்லைவாயில் பூம்பொழில் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்துதார். மேலும் சரவணகுமார் அம்பத்தூரில் இயங்கிவரும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று வழக்கம் போல் பணிக்குச் சென்ற சரவணகுமார் மாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அங்கிருந்த மத்திய அரசு ஊழியர்கள் உடனே அம்பத்தூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அம்பத்தூர் துணை ஆணையர் மகேஷ், உதவி ஆணையர் கனகராஜ், ஆய்வாளர் ராமசாமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அம்பத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில், சரவணக்குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகமான பணத்தை இழந்ததால், ஓரு வாரகாலமாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. திருமணமாகி 6 மாதங்களே ஆனநிலையில் சரவணகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கிரிப்டோகரன்சியில் இரு காவலர்கள் 1.5 கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாந்திருந்தனர். இதனால் போலி நிறுவனத்தில் முதலீடு, ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களில் காவலர்கள் ஈடுபடக்கூடாது என உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE