தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் ஓடும் காரை நிறுத்தி மூன்று பேர் கொண்ட கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் காருக்குள் இருந்த இருவர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூட்டிற்கும் மத்தியில் டிரைவர் மிக சாமர்த்தியமாகச் செயல்பட்டு அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு கிளம்பும் சிசிடிவி காட்சிகள் சினிமா படத்தையே மிஞ்சுவது போல் உள்ளது.
டெல்லியின் மேற்குப் பகுதியில் உள்ள சுபாஸ் நகர் பகுதி எப்பொழுதுமே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாகும். இங்கு நூற்றுக்கணக்கில் வாகனங்கள் போய், வந்து இருக்கும். நேற்று இரவு அப்படியான பீக் அவர்ஸில் வெள்ளைக் கலர் இன்னோவா கார் ஒன்று அந்தச் சாலையில் வந்தது. அப்போது டூவீலரில் வந்த மூன்றுபேர் கொண்ட கும்பல், அந்த காரைச் சுற்றி வளைத்தனர். முன்னாலும், பின்னாலும் பல வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோதும், அவர்கள் அவற்றைப் பற்றி கவலைப்படாமல் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பத்து குண்டுகள் சுடப்பட்ட நிலையில் டிரைவர் திடீரென காரை எடுத்துக்கொண்டு, திருப்பி மின்னல் வேகத்தில் எதிர்திசையில் பறந்தார். இதில் காருக்குள் இருந்த இருவர் படுகாயம் அடைந்தனர். இருந்தும் காருக்குள் இருந்தவர்கள் யார்? எதற்காக அவர்களை ஒரு கும்பல் கொலை செய்யப் பார்த்தது? என்பது குறித்த விபரங்கள் இதுவரைத் தெரியவில்லை. தொடர்ந்து டெல்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தலைநகர் டெல்லியையே உலுக்கியுள்ளது.