கார்-பைக் நேருக்கு நேர் மோதல் : பாம்பன் பாலத்திலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்ட வாலிபர்!

By மு.அஹமது அலி

கார், டூவீலர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாம்பன் கடலில் வாலிபர் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நாராயணன், ஹரிமுகேஷ். இவர்கள் இருவரும் இன்று டூவீலரில் மண்டபத்திலிருந்து பாம்பன் நோக்கி சென்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கருணாமூர்த்தி தனது குடும்பத்துடன் காரில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தனக்கு முன்னால் சென்ற காரை அவர் முந்த முயன்றுள்ளார்.

அப்போது டூவீலரில் வந்து கொண்டிருந்த நாராயணன், ஹரிமுகேஷ் ஆகியோர் எதிரே கார் வேகமாக வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக நடைபாதை அருகே தங்கள் வந்த டூவீலரை திருப்பியுள்ளனர். அவர்கள் மீது மோதாமல் இருக்க கருணாமூர்த்தியும் நடைபாதை பகுதியை நோக்கி காரைத் திருப்பி உள்ளார். இதனால் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் மோதிய வேகத்தில் டூவீலரின் பின்புறம் அமர்ந்திருந்த ஹரிமுகேஷ் பாம்பன் கடலில் தூக்கி வீசப்பட்டார். தகவல் அறிந்து வந்த மண்டபம் போலீஸார், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஹரிமுகேஷை கயிறு மூலம் மீட்டனர். ஆனால், அவரது இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து காயமடைந்த நாராயணன், ஹரிமுகேஷ் ஆகியோரை சிகிச்சைக்காக மண்டபம் அரசு மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கும் போலீஸார் அனுப்பி வைத்தனர். அங்கு நாராயணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஹரிமுகேஷிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பாம்பன் போலீஸார், கருணாமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் பாம்பன் பாலத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE