தூத்துக்குடியில் பள்ளித் தலைமையாசிரியர் உள்பட மூன்று பேர் இன்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவரான பள்ளிக்கூட தலைமையாசிரியரான தாமஸ் சாமுவேல் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் ஆவார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் உள்பட 87 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த மாதத்தில் மட்டும் 30 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். இன்று மட்டும் மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி இளையரசேனந்தல் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் 9 குழந்தைகளை பாலியல் கொடுமை செய்ததாக அந்த பள்ளியின் தலைமையாசிரியர் தாமஸ் சாமுவேல்(57) என்பவரைக் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தனர். தாமஸ் சாமுவேலுக்கு, விருதுநகர் மாவட்டம் சின்னகொல்லாப்பட்டி சொந்த ஊராகும். ஏற்கெனவே போக்சோ சட்டத்தில் கடந்த மாதம் 8-ம் தேதி முதல் சிறையில் இருக்கும் தலைமையாசிரியர் தாமஸ் சாமுவேல் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இதேபோல், கடந்த 11-ம் தேதி, 23 வயதான மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கயத்தார் அய்யனார் ஊத்து பகுதியைச் சேர்ந்த குருசாமி(55) என்பவரைக் கோவில்பட்டி போலீஸார் கைது செய்திருந்தனர். குருசாமி மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதேபோல் சங்கரலிங்கம் காவல் சரகத்திற்குட்பட்ட நாகலாபுரம் பேருந்து நிலையத்தில் வாலிபருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட மகாராஜா(32) என்பவர்மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். தூத்துக்குடியில் ஒரேநாளில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது