இந்தூரில் இரண்டு அடுக்கு குடியிருப்பில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். தூக்கத்திலேயே இவர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூரில் உள்ள இரண்டு அடுக்கு குடியிருப்பில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். இந்த தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் தீயணைப்பு வீரர்கள். இரவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மக்கள், என்ன நடப்பது என தெரிவதற்கு முன்பே உயிரிழந்துள்ளது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.