பொதுமக்களை மிரட்டிய ரவுடிகள்: தடுத்த போலீஸ்காரருக்கு நடந்த கொடுமை!

By காமதேனு

பண்ருட்டி அருகே ஏட்டுவை ரவுடி வெட்டிக்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி அருகே உள்ள காட்டுகூடலூரைச் சேர்ந்த தண்டபாணி(45) நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிகிறார். நேற்று இரவு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் டூவீலரில் ரோந்து சென்றார். அப்போது கீழக்கொல்லை பகுதியில் டூவீலரில் இருவர் கத்தியைக் காட்டி மிரட்டுவதாக தண்டபாணிக்கு தகவல் கிடைத்தது.உடனடியாக அவர் சம்பவ இடத்திற்குச் சென்றார்.

அங்கு கத்தி மற்றும் இரும்பு கம்பியுடன் நின்ற இருவரிடம் தண்டபாணி விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் இருவரும் தண்டபாணியை மோசமான வார்த்தைகளால் திட்டினர். அத்துடன் அதில் ஒருவர், கத்தியால் தண்டபாணியை வெட்டினார். மற்றொருவர் இரும்பு கம்பியால் தாக்கியதுடன் தண்டபாணியின் டூவீலரையும் அடித்து உடைத்தனர்.

இந்த தாக்குதலால் நிலைகுலைந்த ஏட்டு தண்டபாணியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரளவும், தாக்குதல் நடத்திய இருவரும் தப்பியோட முயன்றனர். அதில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து காடாம்புலியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த ஏட்டு தண்டபாணிக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டது. பின் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், ஏட்டு தண்டபாணியை கத்தியால் வெட்டியது நெய்வேலி அருகே உள்ள வடக்குத்தை சேர்ந்த ரவுடி வீரமணி(24) எனத் தெரிய வந்தது. இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பி ஓடியவர் அரவிந்தன் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரவுடி வீரமணியை கைது செய்தனர். தப்பி ஓடிய அரவிந்தனை தேடி வருகின்றனர். ஏட்டுவை ரவுடி வெட்டிக்கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE