312 கோடி வங்கி மோசடி விவகாரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி இந்தியன் வங்கியில் தலைமை நிர்வாகி கே.எல் குப்தா சிபிஐ-யில் புகார் அளித்தார். அந்த புகாரில் கடந்த 2017-ம் ஆண்டு தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் மற்றும் அதன் பங்குதாரர்கள் சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவன் ஆகியோர் கமர்சியல் ஷோரூம் வாங்குவதற்காக 150 கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும், அதே ஆண்டில் மேலும் 90 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த கடன் தொடர்பான சொத்துகளை வங்கிக்கு தெரியாமல் மாற்றியதும், இரண்டாவதாக பெற்ற 90 கோடி ரூபாய் கடன் மூலம், கமர்சியல் ஷோரூம் வாங்குவதற்காக பெற்ற கடனை அடைக்க முயற்சி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வங்கியில் கடன் பெறுவதற்காக கூறப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்தாமல், முறைகேடாக வேறு விவகாரங்களுக்கு முதலீடு செய்துடன் பல்வேறு விதிமுறைகள் மீறி ஈடுபட்டதும் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியன் வங்கிக்கு 312 கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்படுத்தும் வகையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியதுடன், வாங்கப்பட்ட கடனுக்கு வட்டியை முறையாக செலுத்தாததால் வாராக் கடனாக அறிவிக்கப்பட்டதாகவும், இதற்கு வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளதாக இந்தியன் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த இந்தியன் வங்கியின் தலைமை மேலாளர் செல்வம், துணை பொது மேலாளர் தமிழரசு ஆகியோர் மீது இந்தியன் வங்கி நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் மற்றும் பங்குதாரர்கள் சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவன் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவன் ஆகிய இருவரும் சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் உரிமையாளரான மறைந்த பல்லக்கு துறையின் மனைவி மற்றும் மகன் ஆவார். பல்லக்கு துறையின் மீதும் இந்தியன் வங்கி சிபிஐயில் புகார் அளித்துள்ளது. ஆனால் கடந்த வருடம் பல்லக்கு துறை உயிர் இழந்த காரணத்தினால் வழக்கில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியன் வங்கியிடம் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், சுமார் 400 கோடி ரூபாயை கடன் தாண்டியதால் கடந்த ஜனவரி மாதம் தியாகராயநகரில் உள்ள சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸை எழும்பூர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்தியன் வங்கி ஜப்தி செய்தது. மேலும் கரூர் வைசியா வங்கியிலும் சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் மற்றும் அதன் நிர்வாகிகள் 162 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.