மகளுக்கு பாலியல் தொல்லை... ஆண் நண்பரை காப்பாற்ற பொய் சொன்ன தாய்: அதிரடி காட்டிய நீதிபதி

By காமதேனு

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆண் நண்பரை காப்பாற்ற நீதிமன்றத்தில் பொய் சாட்சி சென்ற தாயாரை போக்சோவில் கைது செய்ய நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை போக்சோவில் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

சென்னை டிபி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அபிராமி(38). இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர். 2017-ம் ஆண்டு இவரது கணவர் அருண் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியாக சென்று விட்ட நிலையில் 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

2018-ம் ஆண்டு அபிராமி வெளியூர் சென்ற நேரத்தில் அவரது கள்ளக்காதலன் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அபிராமியின் முன்னாள் கணவரின் மகளான 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை சிறுமி தனது தாய் அபிராமியிடம் கூறினார். இதையடுத்து, இது குறித்தது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜார்ஜ் பெர்ணான்டஸ் மீது அபிராமி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஜார்ஜ் பெர்னாண்டஸை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவத்திற்கு பின்னர் அபிராமி மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் 3 மாதத்திற்கு பின் ஜாமீனில் வெளியே வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீண்டும் அபிராமியுடன் நெருங்கி பழகி இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீதான போக்சோ வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜரான அபிராமி, ஜார்ஜ் பெர்ணான்டஸ் மீது தவறுதலாக பொய் புகார் அளித்து விட்டதாகவும், ஜார்ஜ் பெர்னாண்டஸ் தினமும் குடித்து விட்டு தன்னை சித்ரவதை செய்ததால் ஆத்திரத்தில் அவ்வாறு பொய் புகார் அளித்ததாகவும் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி, மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா நேரடியாக காப்பகத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது உண்மை என்பதும், ஆண் நண்பர் ஜார்ஜ் பெர்னாண்டஸை காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் அபிராமி பொய் சாட்சி கூறியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அப்போது நீதிபதி, அபிராமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து அபிராமி மீது போக்சோ, பொய்சாட்சி அளித்தல், உள்ளிட்ட பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE