பெண்ணின் வீட்டாரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த வாலிபரை கொலை செய்த நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்(25). இவர் ஹைதராபாத்தில் உள்ள பிரபல கார் ஷோரூமில் விற்பனையாளராக பணிபுரிந்தார். இவர் சையது அஷ்ரின் சுல்தான்(23) என்ற பெண்ணை காதலித்தார். இவர்கள் இருவரும் ஜனவரி 31-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு சுல்தானின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் சரூர்நகர் தாசில்தார் அலுவலகத்திற்கு அருகே நேற்று வந்து கொண்டிருந்த நாகராஜை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், நாகராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை சம்பந்தமாக வழக்குப்பதிவு போலீஸார் விசாரணை நடத்தினர். தங்களது எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் பெண் வீட்டாரின் குடும்பத்தினர் இந்த கொலையை செய்தது விசாரணையில் தெரிய வந்து. இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத்தில் நடந்த இந்த ஆணவக்கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.