திருப்பதியில் கடத்தப்பட்ட ஐந்து வயது சிறுவன் மைசூரில் ஒரு பெண்ணிடமிருந்து போலீஸரால் மீட்கப்பட்டுள்ளான்.
திருப்பதி அருகே உள்ள தாமிநேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடரமணா. இவர் திருமலையில் மனைவியுடன் இணைந்து பக்தர்களுக்கு திருநாமம் இட்டு அதன் மூலம் வாழ்க்கை நடத்தி வருகிறார். மே 1-ம் தேதி வெங்கடரமணாவும், அவரது மனைவியும் திருநாமம் இடும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களது 5 வயது மகன் கோவர்த்தன் விளையாடிக் கொண்டிருந்தான். இந்த நிலையில், திடீரென கோவர்த்தனை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீஸாரிடம் வெங்கடரமணா புகார் செய்தார்.
இதையடுத்து திருமலையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தார். அப்போது ஒரு பெண் கோவர்த்தனை கடத்தி பேருந்து மூலம் அழைத்துச் செல்வது தெரிய வந்தது. அத்துடன் திருப்பதியில் இருந்து ரயில் மூலம் அப்பெண் அழைத்துச் சென்றதும் போலீஸாரின் விசாரணையின் மூலம் தெரிய வந்தது.
கடத்தல் தொடர்பாக திருமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது கடத்தப்பட்ட கோவர்த்தனுடன் சம்பந்தப்பட்ட பெண் மைசூருக்கு ரயில் மூலம் வந்தது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் திருமலை போலீஸார் மைசூர் விரைந்து சென்று அந்த பெண்ணிடமிருந்து கோவர்த்தனை மீட்டனர். விசாரணையில் அவர் கர்நாடகாவைச் சேர்ந்த பவித்ரா என்பது தெரிய வந்தது. அவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறினார். அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து கோவர்த்தன் அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.