`அந்த மர்ம நபர் நானா?'- பதிவு போட்ட இயக்குநரை சிக்க வைத்த மஞ்சுவாரியர்

By என்.சுவாமிநாதன்

மஞ்சுவாரியர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனத் தொடங்கி, அவர் சுதந்திரமாக இல்லை என்பது வரை பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கிளப்பிவந்த இயக்குநர் சனல் குமாரை கேரள போலீஸார் கைதுசெய்தனர்.

மலையாளத்தில் பிரபல நடிகைகளில் ஒருவர் மஞ்சுவாரியர். நடிகையைக் கடத்தி பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கில் குற்றவாளிப் பட்டியலில் சேர்ந்த நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி ஆவார். அவருடனான விவாகரத்துக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் பிஸியாக வலம் வருகிறார். தமிழிலும் அண்மையில் அசுரன் படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. இந்நிலையில் சமூக வலைதளங்கில் சனல்குமார் சசிதரன் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், மஞ்சுவாரியர், ‘முழுக்க தன் மேனேஜர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவரால் சுயமாக முடிவுகூட எடுக்க முடியாத ஆபத்தான சுழலில் உள்ளார்’’ எனவும் பதிவிட்டுள்ளார். இது கேரள சமூகவலைதளங்களில் ஹாட் டாபிக்கும் ஆனது.

அவர் மேலும், என்னுடைய செக்ஸி துர்கா படத்தைப் பார்த்துவிட்டு மஞ்சுவாரியர் என்னைத் தொடர்புகொண்டார். நாம் சேர்ந்து ஒரு படம் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அப்படித்தான் ‘கயட்டம்’ படம் பிறந்தது. மஞ்சுவாரியரை வைத்து ஒருபடமே எடுத்தபோதும், அவரோடு தனியாகப் பேச வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவரது உதவியாளராக இருந்து, பின்னர் நிர்வாகத் தயாரிப்பாளர்களான பினீஸ் சந்திரனும், பினு நாயரும் அவரைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மிகுந்த சிரமத்திற்கு பின்பே அதுகுறித்து மஞ்சுவாரியரிடமும் கவலையைத் தெரிவித்திருந்தேன். மஞ்சுவின் மேலாளர் இதில் அதிகமாகத் தலையீடு செய்கின்றார். சமீபத்தில் உணவகம் ஒன்று திறப்புவிழாவிற்காக மஞ்சு வாரியர் வந்திருந்தார். அவரை சந்தித்து பேச முயன்றேன். அப்போது, அவரது உதவியாளர்கள் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். எனத் தொடர்ந்து மஞ்சுவாரியர் பெரிய ஆபத்தில் சிக்கியிருப்பதைப் போன்றே பதிவினை வெளியிட்டும், பேசியும் வந்தார்.

பிரபல மலையாள இயக்குநர் சனல் குமார்

தானே சிக்கிய சனல்!

இந்நிலையில் எர்ணாக்குளத்தை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் சமூக வலைதளங்களில் தனக்கு தொந்தரவு செய்துவருவதாக மஞ்சுவாரியார் போலீஸ் புகார் கொடுத்திருந்தார். இதுபற்றித் தெரியவந்ததும், அந்த மர்ம நபர் நானா என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என மீண்டும் பதிவுகளாக போட்டு தீர்த்தார் சனல்குமார் சசிதரன். இந்நிலையில் இவ்விவகாரத்தில் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றிங்கரை பகுதியில் சனல்குமாரை போலீஸார் பிடித்தனர். அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தரப்பில் உரிய விளக்கம் இல்லாததைத் தொடர்ந்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE