`வாக்குமூலம் பெறணும், அழைத்து வாருங்கள்'- இன்ஸ்பெக்டரால் சிறுமிக்கு நடந்த கொடுமை

By காமதேனு

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி புகார் அளிக்க சென்றபோது, காவல் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வேதனை சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், லலித்பூர் நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர், லலித்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பின்னர், அதற்கு அடுத்த நாள் சிறுமியின் பெற்றோருக்கு லலித்பூர் இன்ஸ்பெக்டர் திலக்தாரி சரோஜ் போன் செய்துள்ளார். அப்போது, சிறுமியின் வாக்குமூலத்தை பெற அவரை நேரில் அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன்பேரில், உறவினர் ஒருவருடன் சிறுமி காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது, அவரை தனி அறைக்கு அழைத்து சென்ற இன்ஸ்பெக்டர் திலக்தாரி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து, சிறுமியின் உறவினர்கள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததோடு, இன்ஸ்பெக்டரின் செயலை ஊடகங்களிடம் அம்பலப்படுத்தினர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்தன. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் திலக்தாரி சரோஜை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக டிஐஜி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 24 மணிநேரத்தில் அறிக்கை அளிக்கப்படும் என்றும், அறிக்கையின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் உ.பி. காவல்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE