சென்னையில் மெரினாவை நோக்கி தனது பெண் தோழிகளுடன் வாலிபர் சென்ற டூவீலர் விபத்தில் சிக்கியது. இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னை விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் பிரவீன் (25), திருச்சியைச் சேர்ந்தவர் தமிழரசி (22), திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (22). இவர்கள் மூவரும் 'கிளப் ஹவுஸ்' என்ற செயலி மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் நண்பர்களாகி உள்ளனர்.
சென்னையில் பிரவீனுடன் டூவீலரில் தமிழரசி, ஐஸ்வர்யா ஆகியோர் மெரினா நோக்கி இன்று வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாறு பாலத்தை அடுத்துள்ள வேகத்தடுப்பை இவர்கள் கவனிக்காமல் சென்றதால், கட்டுப்பாட்டை இழந்து மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் படுகாயமடைந்த தமிழரசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பிரவீன், ஐஸ்வர்யா ஆகியோர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேகமாக சென்ற பிரவீனின் டூவீலர் முன்னால் சென்ற மினி லாரியில் மோதி அதன் காரணமாக சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக மினி லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் இந்திரனைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.