சென்னை ரயில்வேயில் வேலை வாங்கித்தருகிறேன் எனக்கூறி பாலக்காடு பெண்ணை ஆறாவது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கேரளா மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அகத்தேதரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை சென்னையைச் சேர்ந்த ஸிஜீஷ் ( 41) என்பவர் சந்தித்துள்ளார். சென்னை ரயில்வேயில் பொறுப்பான வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளார். அத்துடன் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய இளம்பெண், ஸிஜீஷிடம் பணம், நகைகளைக் கொடுத்துள்ளார். அதை வாங்கிச் சென்ற ஸிஜீஷ் 10 நாட்களாகியும் தொடர்பு கொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த இளம்பெண், பாலக்காடு ஹேமா அம்பிகைநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ஸிஜீஷ் தொடர்பு எண்ணைக் கொண்டு அவரைத் தேடி வந்தனர்.
அப்போது அவர் பாலக்காட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவரை விரைந்து சென்று போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது.
கடந்த பல மாதமாக கேரளா மாநிலத்தில் திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் பல பெண்களைச் சந்தித்து சென்னையில் ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன் என ஸிஜீஷ் நம்ப வைத்துள்ளார். அந்த நம்பிய பெண்களிடம் பணம், நகையைப் பறித்து கொண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி ஐந்து பெண்களை அவர் ஏமாற்றி திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது. திருமணமான பெண்களுடன் மூன்று மாதம் வரை குடும்பம் நடத்தி விட்டு அதன் பின் தலைமறைவாகி விடுவது அவரது வழக்கமாக இருந்துள்ளது. ஆறாவது திருமணம் செய்ய முயன்ற நிலையில் போலீஸாரிடம் அவர் சிக்கியுள்ளார். சென்னையில் இவருடைய தந்தையும் இதேபோல் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்தது பாலக்காடு போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஸிஜீஷை கைது செய்து நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.