15 அடி கிணற்றிற்குள் பாய்ந்த கார்... நொடிப்பொழுதில் குடும்பத்தையே காப்பாற்றிய மக்கள்

By என்.சுவாமிநாதன்

கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் டூவீலர் மீது மோதிய கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 15 அடி ஆழக் கிணற்றுக்குள் பாய்ந்தது. கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையிலும் அதிர்ஷ்டவமாக காருக்குள் இருந்தவர்கள் உயிர் பிழைத்த ஆச்சரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து, மீட்புப் பணிகள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காசர்கோடு மாவட்டத்தின் உடுமா பகுதியைச் சேர்ந்த அப்துல் நாசர் என்பவர் தனது மகன்கள் முகமது மிதுலாஜ், அஜ்மல், வாஹித் ஆகியோருடன் பூச்சக்காடு நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். ரம்ஜான் கொண்டாட்டத்திற்காக கடற்கரை நோக்கித் தன் மகன்களை அழைத்துச் சென்றார் நாசர். அந்த பிரதான தார் சாலையை ஒட்டியே கிணறு ஒன்று இருந்தது. தரைமட்டத்தில் இருந்து இரண்டரை அடி உயரத்திற்கு பக்கச்சுவர் எழுப்பப்பட்டிருந்த அந்த கிணற்றின் மேல்பகுதி வயலான் வலையால் மூடப்பட்டிருந்தது.

அப்துல் நாசர் காரை ஓட்டிவந்தபோது, எதிரே வந்த டூவீலரில் அவர் கார் மோதியது. இதில் டூவீலரில் வந்தவர் நிலைகுலைந்து கீழேவிழுந்தார். டூவீலரில் மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து நேரே அருகில் இருந்த கிணற்றிற்குள் பாய்ந்தது. 15 அடி ஆழமுள்ள கிணற்றில் கார் விழுந்த சப்தம் கேட்டு அப்பகுதிவாசிகள் பெருந்திரளாகத் திரண்டனர்.

இதைப்பார்த்த அப்பகுதிவாசிகள் ராமச்சந்திரன், அய்யப்பன், பாபு ஆகியோர் மின்னல் வேகத்தில் கிணற்றுக்குள் இறங்கி, காருக்குள் இருந்த மூன்று குழந்தைகளையும் மீட்டு மேலே கொண்டுவந்தனர். இதனிடையே தீயணைப்பு வீரர்கள் பவித்திரன், லினேஷ், நிகில் ஆகியோர் களத்திற்கு வந்து காரை ஓட்டிவந்த அப்துல் நாசரை கயிறு மூலம் மீட்டனர். இதேபோல் இருசக்கர வாகனத்தில் வந்து விபத்துக்குள்ளான பசீலாவையும் அவரது குடும்பத்தினரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.

தொடர்ந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு தீயணைப்புத்துறை அதிகாரிகள் காரை மீட்டனர். அப்போது கார் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்து, அப்பளம் போல் நொறுங்கியிருந்தது. இவ்வளவு கோரவிபத்திலும் நான்கு பேரும் உயிர்தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தீயணைப்பு வீரர் பவித்திரன் கூறுகையில், ``பகுதிவாசிகள் உடனே கயிறுகட்டி கிணற்றில் இறங்கி குழந்தைகளை மீட்டுவிட்டனர். கார் பலத்த சேதமடைந்தும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய ஆபத்து இல்லை. குழந்தைகளுக்கும் ஸ்கேன் எடுத்துப் பார்த்தோம். இன்னொன்று பகுதிவாசிகள் உடனடியாக கிணற்றுக்குள் இறங்கியதும், மீட்புப்பணியை துரிதப்படுத்தியதும் காருக்குள் மூச்சுத்திணறல் இல்லாமல் அனைவரையும் மீட்க வழிவகுத்தது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE