அதிகாலையில் வெடித்து சிதறிய ஏ.சி, செல்போன்: உயிருக்கு போராடும் இளைஞர்

By காமதேனு

செங்கல்பட்டு அருகே ஏ.சி. வெடித்து இளைஞர் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடிக்கடி ஏ.சி., ஃபிரிட்ஜ் ஆகியவை வெடிக்கும் சம்பவங்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில் அடுத்த திருத்தேரி பகுதியில் உள்ளது அன்பு மெஸ். கடந்த 10 நாள்களுக்கு முன்பாக ராம்குமார்(27) என்ற இளைஞர் இந்தக் கடைக்கு வேலை தேடி வந்துள்ளார். அப்போது கடை உரிமையாளர் தங்க மாரியப்பன் இங்கே வேலை இல்லை எனச் சொல்லியிருக்கிறார். “எங்கேயும் வேலை கிடைக்கவில்லை. சாப்பாடு போட்டா போதும், நீங்க எவ்வளவு சம்பளம் கொடுக்க முடியுமோ கொடுங்க” எனக் கெஞ்சி இருக்கிறார். கரிசனத்தோடு அவரை அணுகிய கடையின் உரிமையாளரும் ராம்குமாரை வேலைக்குச் சேர்த்துக் கொண்டுள்ளார். கடந்த பத்து நாள்களாக அங்கேயே வேலை செய்வதும், கடைக்கு மாடியில் படுத்துக் கொள்வதுமாக ராம்குமார் இருந்துள்ளார்.

வழக்கம் போல நேற்று இரவு ராம்குமார் கடையின் மொட்டை மாடியில் ஏ.சி.யின் அவுட்டோர் யூனிட் அருகே படுத்து உறங்கி இருக்கிறார். அவர் அருகே தங்கமாரியப்பனும் உறங்கியிருக்கிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென வெடிக்கும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு தங்கமாரியப்பன் எழுந்து பார்த்தபோது, ஏ.சி. வெடித்து கரும்புகை வெளியேறிக் கொண்டிருந்திருந்தது. ராம்குமார் மயங்கிய நிலையிலிருந்துள்ளார். அருகே ராம்குமாரின் செல்போனும் தீப்பற்றிய நிலையிலிருந்திருக்கிறது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை ராம்குமார் அனுமதிக்கப்பட்டார்.

ராம்குமாருக்கு நாற்பது சதவீதத்திற்கு மேல் தீக்காயம் இருந்த காரணத்தினால் செங்கல்பட்டு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஏ.சி. இருந்த அறையிலும் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. ஏ.சி. வெடித்து செல்போன் தீ பிடித்ததா அல்லது உயர் மின்னழுத்த கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து மறைமலைநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏ.சி. மெக்கானிக் ஷாஜகான்

இந்த நிலையில் செங்கல்பட்டு ஏ.சி. மெக்கானிக் ஷாஜகானிடம் பேசினோம். “புதிதாக வரும் இன்வெட்டர் ஏ.சி. உயர் மின்னழுத்த கம்பி அருகே இருந்தால் செயல்படாது. பழைய மாடல் ஏ.சி.க்களில் கேஸ் அழுத்த அளவு 100க்குள் இருக்கும். அதில் சற்று கூடுதலாக கேஸ் ஏற்றினாலும் சிக்கல் இருக்காது. தற்போது குறைந்தபட்சம் 120 என உயர் அழுத்த நிலையில் ஏ.சி.க்கள் வருகிறது. ஏ.சி.யில் குறிப்பிட்டுள்ள அளவிற்கு மேல் கேஸ் ஏற்றினால் புதிய வகை ஏ.சி வெடித்துவிடும். அனுபவம் நிறைந்த மெக்கானிக்கை கொண்டு மட்டுமே ஏ.சி.யை சர்வீஸ் செய்ய வேண்டும். எளிதில் தீப்பிடிக்கக் கூடிய 32, 290, 410 ஆகிய குறியீடுகளில் கிடைக்கும் கேஸ் எளிதில் தீப்பற்றக் கூடியவை. மற்றும் ஆபத்தானவை. ஏ.சி. பராமரிப்பு விஷயத்தில் அதன் உரிமையாளர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால் பெருமளவு விபத்துகளைத் தவிர்க்கலாம்” என்றார்.

ஏ.சி. விபத்து செய்தியைக் கேட்டாலே அனல் தெரிக்கிறது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE