`என் தந்தையை அடித்தே கொன்றுவிட்டனர்'- போதை மறுவாழ்வு மையம் மீது மகன் புகார்

By ரஜினி

"மதுபானத்துக்கு அடிமையான என்னுடைய தந்தையை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்ததாகவும், அவர்கள் தந்தையை அடையாளம் தெரியாத அளவுக்கு அடித்து கொன்றுவிட்டார்கள்" என மகன் பகீர் புகார் அளித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை பெரியார் திடல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜி (45). இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ஆட்டோக்களுக்கு ரீப்பர் அடிக்கும் வேலை பார்த்து வந்த ராஜி மதுபோதைக்கு அடிமையாகி தினமும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் மது பழக்கத்திற்கு அடிமையான ராஜியை அவரது மனைவி கலா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராயப்பேட்டை வெஸ்கோஷ் சாலையில் உள்ள சென்னை கேர் சென்டர் என்ற போதை மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ராஜி மீண்டும் மது பழக்கத்திற்கு அடிமையாகி மீண்டும் ராஜி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து நேற்று காலை கணவர் ராஜியை ராயப்பேட்டை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார் மனைவி கலா.

இந்நிலையில், நேற்றிரவு போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்தி, கலாவை தொடர்பு கொண்டு கணவர் ராஜி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கலா உடனே ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது கணவர் ராஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் கணவரின் உடலை பார்த்த போது முகம், உடலில் பலத்த காயங்கள் இருந்ததை கண்டு கலா அதிர்ச்சிடைந்தார். தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கலா அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அண்ணாசாலை போலீஸார் வழக்கு பதிவு செய்து போதை மறுவாழ்வு மைய மேலாளர் மோகன், ஊழியர் ஜெகன், பார்த்தசாரதி ஆகியோரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

தனது தந்தையை போதை மறுவாழ்வு மையத்தில் அடித்து கொன்றுவிட்டதாக கூறும் மகன் மணிகண்டன், நேற்று போதை மறுவாழ்வு மையத்தில் 40 ஆயிரம் செலுத்திவிட்டு தனது தந்தையை நல்ல முறையில் சிகிச்சைக்காக சேர்த்தோம். சிறிது நேரத்தில் தனது தந்தை கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு சீரியஸாக இருப்பதாக தெரிவித்தனர். உடனே சென்று பார்த்தபோது தனது தந்தையின் முகம், உடல் முழுவதும் அடித்த காயம் இருந்தது. யார் அடித்தது என கேட்டதற்கு, ஒருவரும் பதிலளிக்கவில்லை. ஒரு காயமும் இல்லாமல் சென்ற தனது தந்தையை அடையாளம் தெரியாமல் அளவுக்கு அடித்து கொன்றுவிட்டார்கள். அந்த மையத்தில் உள்ள அனைவரையும் அடித்து பயமுறுத்தி வைத்துள்ளனர்" என்று கூறினார்.

தனது கணவர் திருந்த வேண்டும் என்று அனுப்பி வைத்ததாகவும், ஆனால் அவர்கள் அடித்து கொலை செய்துவிட்டதாக அவரது மனைவி கலா குற்றம்சாடியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE